தமிழ்க் கடவுளுக்கு ஆரியப் படையலா?
ந.சி. கந்தையா
1. தமிழ்க் கடவுளுக்கு ஆரியப் படையலா ?
2. தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)
3. அகம் நுதலுதல்
4. நூலறிமுகவுரை
5. கருவிநூல் தந்த ந.சி. கந்தையா
6. பதிப்புரை
7. தமிழ்க் கடவுளுக்கு ஆரியப் படையலா ?
தமிழ்க் கடவுளுக்கு ஆரியப் படையலா ?
ந.சி. கந்தையா
நூற்குறிப்பு
நூற்பெயர் : தமிழ்க் கடவுளுக்கு ஆரியப் படையலா ?
ஆசிரியர் : ந.சி. கந்தையா
பதிப்பாளர் : இ. இனியன்
முதல் பதிப்பு : 2003
தாள் : 16.0 கி. மேப்லித்தோ
அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 11 புள்ளி
பக்கம் : 20 + 164 = 184
படிகள் : 2000
விலை : உரு. 80
நூலாக்கம் : பாவாணர் கணினி
2, சிங்காரவேலர் தெரு,
தியாகராயர் நகர், சென்னை - 17.
அட்டை வடிவமைப்பு : பிரேம்
அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட்
20 அஜீஸ் முல்க் 5வது தெரு
ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006
கட்டமைப்பு : இயல்பு
வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம்
328/10 திவான்சாகிப் தோட்டம்,
டி.டி.கே. சாலை,
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)
தமிழ்மொழியின் தொன்மையை அதன் தனித் தன்மையை உலக மொழிகளோடு ஒப்பிட்டு விரிவாக ஆய்வு செய்தவர் தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள். தமிழ் இனத்தின் மேன்மையை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்தவரும் அவரே.
‘தொண்டு செய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே’
என்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். புரட்சிக் கவிஞரின் கனவை நினைவாக்கும் வகையில், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தமிழின் துறைதோறும் துறைதோறும் அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். தமது நூல்களின் வாயிலாக வீழ்ச்சியுற்ற தமிழினத்தை எழுச்சி பெறச் செய்தவர்.
ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப் பணியோ மலையினும் மாணப் பெரியது. ஆயினும் அவருடைய வாழ்க்கைப் பதிவுகளாக நமக்குக் கிடைப்பன தினையளவே யாகும். தமிழர்கள் அந்த மாமனிதரின் தமிழ்ப் பணியைக் கூர்ந்து அறிந்து தக்க வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யத் தவறி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. இன்று அவருடைய வாழ்ககைக் குறிப்புகளாக நமக்குக் கிடைப்பன மிகச் சிலவாகும். அவை:-
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் ஈழ நாட்டில் கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டில் திரு நன்னியர் சின்னத்தம்பி என்பாரின் புதல்வராய்ப் பிறந்தார். தக்க ஆசிரியரிடம் பயின்று கல்வியில் தேர்ந்தார். பின்னர் கந்தரோடை என்னும் ஊரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். ஆசிரியர் பணியிலிருக்கும் போதே தக்க பெரும் புலவர்களைத் தேடிச் சென்று தமிழ் இலக்கிய இலக்கணங்கள் முறையாகப் பயின்று பெரும் புலவராய் விளங்கினார். ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்ற வல்லுநராய்த் திகழ்ந்தார். பின்னர் மலேசியா நாட்டிற்குச் சென்று சிறிதுகாலம் புகைவண்டி அலுவலகத்தில் பணியாற்றினார்.
ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் தமிழறிவு ஆழமும் அகலமும் கொண்டது. அவரது வாழ்க்கை முழுமையும் தமிழ் ஆய்வுப் பணியே பெரும் பணியாக அமைந்தது. அவர் பெற்ற ஆங்கில அறிவின் துணையால் தமிழ் மொழி, தமிழினம் தொடர்பான மேலை நாட்டு அறிஞர்களின் நூல்களை யெல்லாம் நுணுகிக் கற்றார் வியக்கத்தக்க கல்விக் கடலாய் விளங்கினார். அறுபதுக்கு மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதினார்.
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தாம் எழுதிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்று வேட்கை கொண்டார். இலங்கையில் அதற்குப் போதிய வசதி இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார். சென்னையில் “ஒற்றுமை நிலையம்” என்னும் பதிப்பகத்தின் உரிமையாளராய்த் திகழ்ந்தவர் வீரபாகு பிள்ளை என்பவர். அவர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் வாயிலாக ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் நூல்கள் வெளிவரலாயின.
ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் அருமைத் துணைவியார் இரத்தினம்மா எனப்படுபவர். இவருக்குத் திருநாவுக்கரசு என்றொரு மகனும் மங்கையர்க்கரசி என்றொரு மகளாரும் உண்டு. துணைவியார் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். தமிழ்மொழி, தமிழினம் ஆகியவற்றின் மேன்மைக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை தமது எழுபத்து நான்காம் வயதில் 1967இல் இலங்கையில் மறைந்தார். எனினும் தமிழ் வாழும் வரை அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
தமிழறிஞர் கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி மதிப்பு மிக்கது; காலத்தை வென்று நிலைத்துநிற்க வல்லது. தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ்ப்பண்பாடு, தமிழ்இனம் ஆகியவற்றின் வரலாற்றை எழுதியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. அவருடைய ஆய்வுப் பணியைச் சிறிது நோக்குவோம்.
அகராதிப் பணி
தமிழ் மொழியில் முதன் முதலில் தோன்றிய அகராதி வீரமா முனிவர் எழுதிய சதுரகராதியே யாகும். பின்னர் பல்வேறு அகராதிகள் தோன்றின, வளர்ந்தன, வெளிவந்தன. அகராதி வளர்ச்சிப் பணியில் கந்தையா பிள்ளையவர்களுக்கும் பெரும் பங்குண்டு. அவர் படைத்த அகராதிகள் ஐந்து. 1. செந்தமிழ் அகராதி, 2. தமிழ் இலக்கிய அகராதி, 3. தமிழ்ப் புலவர் அகராதி, 4. திருக்குறள் அகராதி, 5. காலக் குறிப்பு அகராதி என்பன அவை.
ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் செந்தமிழ் அகராதி முன்னுரை யில் “நாம் தமிழ்த் தாய் மொழிக்குச் செய்யும் பணிகளுள் ஒன்றாக இந் நூலைச் செய்து முடித்தோம்” என்கிறார். “நூலொன்றைச் செய்து தமிழுலகுக்கு உதவ வேண்டும் என்னும் ஆவலால் பலவகையில் முயன்று இந் நூலைச் செய்து முடித்தோம்” என்று கூறுகிறார். தமிழ் இலக்கிய அகராதியில் அகத்தியர் முதல் வைராக்கிய தீபம் ஈறாக ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ்ப் புலவர் அகராதியில் பல நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவர் தொகுத்த திருக்குறள் சொற் பொருள் அகராதி பயன்பாடு மிக்கது. காலக்குறிப்பு அகராதி புதுமை யானது. தமிழ் மொழியில் இது போன்ற அகராதி இதுவரை வெளிவந்த தில்லை “இந்நூல் ஓர் அறிவுக் களஞ்சியம்” என்கிறார் முனைவர். மா. இராச மாணிக்கனார்.
இலக்கியப் பணி
புலவர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த தமிழ் இலக்கியச் செல்வத்தை எளிய மக்களும் படித்துப் பயன் பெறுமாறு உரைநடையில் வழங்கிய வள்ளல் கந்தையா பிள்ளை அவர்கள்.
பத்துப்பாட்டு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் விளக்கம், விறலிவிடுதூது போன்ற இலக்கியச் செல்வங்களை எல்லாம் இனிய எளிய நடையில் உரைநடையில் தந்தவர் கந்தையா பிள்ளை அவர்கள். திருக்குறளுக்கும், நீதிநெறி விளக்கத்திற்கும் அரிய உரை வரைந்தவர்.
தமிழ்மொழி - தமிழினம்
தமிழ்மொழி - தமிழினம் தொடர்பாகப் பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவர் கந்தையா பிள்ளை. தமிழகம், தமிழ் இந்தியா, தமிழர் சரித்திரம், தமிழர்யார்?, வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர், நமதுமொழி, நமதுநாடு, தமிழ் ஆராய்ச்சி, தமிழ் விளக்கம், முச்சங்கம், அகத்தியர், சிந்துவெளி நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழர்சமயம் எது? சிவன், சைவ சமய வரலாறு, தமிழ்ப் பழமையும் புதுமையும் போன்ற எண்ணற்ற அரிய ஆயவு நூல்களைப் படைத்தவர். ஆயிரக் கணக்கான நூற்கடலுள் மூழ்கி எடுத்த அரிய கொற்கை முத்துக்கள் அவரது நூல்கள். எத்தனை ஆண்டுகாலப் பேருழைப்பு! நினைத்தால் மலைப்புத் தோன்றும். தமிழின் - தமிழினத்தின் தொன்மையைத் தமிழர்தம் பண்பாட்டை - நாகரிகத்தை, தமிழர்தம் உயர் வாழ்வியலை உலகறியச் செய்த பேரறிஞர் கந்தையா பிள்ளை.
திராவிட நாகரிகமும் - ஆரியத்தால் விளைந்த கேடும்
தொன்மை மிக்க திராவிட நாகரிகத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல நூல்களை எழுதினார். அவை:-
திராவிடர் நாகரிகம், திராவிடம் என்றால் என்ன? திராவிட இந்தியா, தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் போன்ற அரிய ஆய்வு நூல்களை எழுதினார். ஆரியர்களால் விளைந்த கேடுகள் குறித்தும், ஆரியர் தமிழர் கலப்பு, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம் நடந்த கதையா? என்பன போன்ற நூல்களை எழுதினார்.
பிற
மாணவர் தம் அறிவை விரிவு செய்யும் வகையில் எட்டு நூல்களும், மகளிருக்குப் பல்லாண்டுக் காலமாக இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து மூன்று நூல்களையும் எழுதினார். மேலும் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவும் மனித இனத்தோற்றம் குறித்த நூல்கள் சிலவும் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். புரட்சிக் கவிஞர் கூறியவாறு துறைதோறும், துறைதோறும் எண்ணற்ற நூல்களை எழுதித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். ந.சி. கந்தையா பிள்ளை. புட்சிக்கவிஞர் பாரதிதாசனார், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களைப் பற்றிப் பின்வருமாறு பாராட்டுகிறார்.
“ந.சி. கந்தையா எனும் நல்லவன், வல்லவன் தமிழ் தமிழின வரலாறனைத்தையும் தொல்பொருள் ஆய்வின் தொகை வகை, விரித்து நிலநூல், கடல்நூல் சான்றுகள் நிறைத்தும் தமிழ் நூற் சான்றுகள் முட்டறுத் தியம்பியும் இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும் பழக்க வழக்க ஒழுக்கம் காட்டியும் வையகம் வியக்க வரலாறு எழுதினான். பொய் அகன்று மெய்க் கை உயர்ந்தது.”
வாழ்க! ந.சி. கந்தையா பிள்ளையின் பெரும் புகழ்!
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வரலாறே தமிழர் களால் மறக்கப்பட்டு விட்டது. தமிழ்ப் பகைவர்களால் மறைக்கப்பட்டு விட்டது. அங்ஙனமிருக்க அம் மாமனிதரின் ஆய்வு நூல்கள் மட்டும் எங்ஙனம் கிடைக்கும்? ஆழ்கடலிலிருந்து முத்துக்கள் எடுப்பது போல, தங்கச் சுரங்கத்திலிருந்து தங்கத்தை வெட்டி எடுப்பது போல, பெருமுயற்சி எடுத்து ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்களைத் தேடினேன். நூல்நிலையங்களைத் தேடித்தேடி என் கால்கள் அலைந்த வண்ணம் இருந்தன. அதன் விளைவாக ஐம்பது நூல்கள் கிடைத்தன. பெரும் புதையலைத் தேடி எடுத்தது போல் பெருமகிழ்வுற்றேன்.
அன்பன்
கோ. தேவராசன்
அகம் நுதலுதல்
உலகில் வாழும் மாந்தர் அனைவர்க்கும் உள்ளார்ந்த எண்ண ஓட்டங்கள் அலை அலையாய் எழுந்து பல்வேறு வடிவங்களில் வெளிப் படுகின்றன. சங்கக் காலத்துத் தமிழ் மாந்தர் தமது எண்ணங்களை ஒழுங்கு படுத்தி ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்தி வாழ முற்பட்டதன் விளைவே நாகரிகத்தின் தொடக்கம் எனலாம்.
உலகில் தோன்றி வாழ்ந்து வரும் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது இயல்பாக விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அந்த இன்பத்துககுத் தடையோ இடையீடோ நேரின் அதைப் போக்கிக் கொள்ள முயலும் முறையில் மனிதக் குலத்துக்குத் தனிப் பண்பு சிறப்பாக வெளிப்பட்டிருப்பதைச் சங்க இலக்கியத்தின் வழி நன்கு அறிய முடிகிறது.
தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று பெரும் பிரிவாக மனித வாழ்வின் இயல்பை வகுத்து இலக்கணம் செய்தாலும், அவன் உள்ளத்தில் எழும் உணர்வை வெளிப்படுத்த மொழியும் சொல்லும் அதன் பொருளும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருக்கின்ற பாங்கு புறத்திணைச் செய்யுளைக் காட்டிலும் அகத்திணைச் செய்யுள்களிலேயே மிகுந்திருப்பதைக் காண முடிகிறது.
தொல்காப்பியர் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றார். குறித்தனவே என்னும் தேற்றேகாரம் பொருள் குறியாத சொல் இல்லை என்பதையே உணர்த்துகிறது. இற்றை நாளில் நம்மில் சிலர் வஞ்சக எண்ணத்துடனும் பலர் மக்களின் சிந்தனை ஓட்டத்தைத் தூண்டி நல்வழிப் படுத்தவும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதைக் கேட்கிறோம்.
எருதுநோய் காக்கைக்குத் தெரியாது என்று கூறும் போதும் குதிரைக்குக் கொம்பு முளைத்தது போலத்தான் என்று கூறும் போதும் (முயற்கொம்பே) அச் சொல்லின் பொருளையும் அதனால் நுண்ணுணர் வுடையார் அறியும் வேறு பொருளையும் அச் சொல் உணர்த்துவதாக அறிய முடிகிறது. விடுகதைகள் சொல்லி அறிவைத் தூண்டிச் சிந்திக்க வைப்பதும் சிலேடையாகப் பேசி உட்பொருளை உணரத் தூண்டுவதும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அறிவார்ந்த செயல்கள்.
இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்ப் பிரிவின் முடிவும் மனித னின் உள்ளுணர்வை வெளிப்படுத்த முயன்ற முயற்சியே. அகம் - புறம் என்ற பிரிவில் உள்ளத்து உணர்வைத்தான் நுகர்ந்தான் என்பதை எவ்வாறு வெளிப்படுத்துவது? எவ்வாறு அறிவது? அறமோ மறமோ - உயிர் உடல் வேறுபாடுகளால், மொழியால், இசையால், அழுகையால், சைகை என்னும் நாடகத்தால் அல்லவோ வெளிப்படுத்த முடியும். அகத்தில் எழும் காதல் உணர்வை ஒருவனும் ஒருத்தியும் நுகர்ந்த நுகர்ச்சியை இத்தகையது என்று பிறர்க்கு அறிவுறுத்த இயலாது. அகத்தால் மட்டுமே உள் முகமாக நாடி ஆராய்ந்து அறிந்து கொள்ளமுடியும் என்பது உண்மை என்றாலும். இவ்வுணர்வு மனிதக் குலத்திற்கு ஒத்திருப்பதால் சில பல குறிப்புகளை மட்டுமே வெளிப்படுத்தினால் போதும் மற்றவரும் அறிந்து இது இவ்வாறு இருக்கும் என்று உணர்ந்து மகிழவும் ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்யவும் ஏதுவாக இருக்கிறது.
எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய மூன்றும் நானூறு நானூறு பாடல்களாலான தொகை நூல்கள். சங்கக்காலச் சான்றோரின் அரிய முயற்சியால் இவ்வாறு தொகுக்கப் பட்டாலும் அகப் பொருள் திணைக் களங்கள் ஐந்தும் இவற்றுள் கலந்துள்ளன. ஆனால் குறுந்தொகை 4 முதல் 8 அடிகளும், நற்றிணை 9 முதல் 12 அடிகளும், அகநானூறு 13 முதல் 21 அடிகளும் கொண்ட அடிவரையறை களையுடையன. ஏனோ அகநானூறு நீண்ட ஆசிரியப் பாவான் அமைந்து நெடுந்தொகை எனப் பெயர் பெற்றாலும் களிற்றி யானை நிரை, மணிமிடைப் பவளம், நித்திலக் கோவை என முப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உயிர் எழுத்துகள் 12 மெய் எழுத்துகள் 18 என்பதால் எழுத்துகள் ஒவ்வொன்றற்கும் பத்துப் பத்தாகக் களிற்று யானை நிரை 12 x 10 = 120 பாடல்களாகவும் மணிமிடை பவளம் 18 x 10 = 180 பாடல்களாகவும் பிரித்தனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. மதங் கொண்ட யானை போன்ற ஐம்புலனையும் ஒழுங்கு படுத்தக் களிற்றுயானை நிரை என்று உயிர் பன்னிரண்டை 120 ஆகப் பகுத்தனரோ! மணிபோன்ற மெய்யான உடலை நிரல்பட மாலையாகத் தொடுக்கப்பட்டதாக எண்ணிப் பதினெட்டை 180 மணிமிடை பவளமாகத் தொகுத்தனரோ! உள்ளமாகிய கடலின் ஆழத்திலிருந்து சேகரித்த நித்திலத்தை முழுமை பெற்ற மாலையாகத் தரித்து மகிழவோ முழுவதும் நூறி எழுந்த வெற்றி யின்பத்தைக் குறிக்கவோ 100 நூறு பாடல்களை நித்திலக் கோவை எனத் தொகுத்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த முப்பான் பிரிவிற்குக் காரணம் முழுமையாகத் தோன்றவில்லை.
வகுபடாமல் ஒற்றைப் படையாய் எஞ்சி நிற்கும் எண்களையுடைய பாடல்கள் உரிப்பொருளால் பாலைத் திணைப் பாடல்களாகவும், இரண்டும் எட்டும் உரிப் பொருளால் புணர்ச்சியை உணர்த்தும் குறிஞ்சித் திணைப் பாடல்களாகவும், நான்கில் முடியும் எண்ணுள்ள பாடல்கள் நான்கு உறுதிப் பொருள்களை எண்ணி உரிப் பொருளால் ஆற்றி இருக்கும் முல்லைத் திணைப் பாடல்களாகவும், ஆறாவது எண்ணில் முடியும் பாடல்கள் தொடர்ந்து செல்லும் ஆறுபோல மனம் ஒருநிலைப் படாமல் மாறி மாறி உடல் கொள்ளவாய்ப்பாக அமைந்து நீர் வளம் மிக்க மருதத்திணைப் பாடலாகவும், முழுமை பெற்ற ஒன்றோடு சுழியைச் சேர்த்தது போன்ற பத்தாம் எண்ணுள்ள பாடல்கள் யான் என் தலைவனோடு சேர்ந்து என்று முழுமை பெறுவோனோ என்று இரங்கி ஏங்கும் உரிப் பொருளால் நெய்தல் திணைப் பாடலாகவும் பகுத்துத் தொகுத்திருக்கும் பாங்கு அகநானூற்றுப் பாடல்களில் மட்டுமே காணப்படும் சிறப்பாகும். முல்லை, மருதம், நெய்தல் ஆகிய முத் திணைப் பாடல்கள் ஒவ்வொன்றும் சமமாக நாற்பது பாடல்களைக் கொண்டு பொதுவாக அமைந்துள்ளது. புணர்ச்சி உரிப் பொருளை உணர்த்தும் குறிஞ்சிப் பாடல்கள் எண்பதாக அமைந்தன; பிரிவை உணர்த்தும் பாலைத்திணைப் பாடல்கள் இருநூறாக உள்ளது வாழ்வில் இன்பம் அடைய துன்பத்தில் மிகுதியும் உழல வேண்டியுள்ளது என்பதை உணர்த்தவோ என்று எண்ணத் தோன்றுகிறது.
அகத்துறைப் பாடல்கள் நாடகப் பாங்கில் அமைந்துள்ளன. சொல்ல வந்த கருத்தை நிலை நாட்ட உவமை மூலமாக விளக்குவது மிகவும் எளிது. பெண்கள் நயமாகப் பேசிக் கருத்தை வலியுறுத்திச் செயல் படுத்துவதில் வல்லவர்கள். அகத்துறையில் தோழி அறத்தொடு நின்று பேசும் பேச்சுகள் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைக் காட்டுவன. தோழியின் பேச்சில் உள்ளுறைப் பொருளும் இறைச்சிப் பொருளும் வெளிப்படும் பாங்கு நினைந்து நினைந்து போற்றத்தக்கன.
உள்ளுறை என்பது தெய்வம் நீங்கலாகக் கூறப்படும். அவ்வந் நிலத்துக் கருப் பொருள்களை நிலைக்களனாகக் கொண்டு உணரப்படும் குறிப்புப் பொருளாகும். கருப் பொருள் நிகழ்சசிகள் உவமம் போல அமைந்து அவற்றின் ஒத்து முடிவது போலப் பெறப்படும் ஒரு கருத்துப் பொருளாகும்.
இறைச்சி தானே பொருட் புறத்ததுவே என்பார் தொல்காப்பியர். இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே இறைச்சி தானே உரிப் புறத்ததுவே என்றும் பாடம். அகத்திணைக் கருப்பொருள்களின் மூலம் பெறப்படும் குறிப்புப் பொருள் இறைச்சி என்று கொள்ளலாம். அக் குறிப்புப் பொருளிலிருந்து வேறு ஒரு கருத்துப் பெறப்படுமாயின் அக் கருத்தே இறைச்சியில் பிறக்கும் பொருள் என்று கொள்ளலாம். அகநானூற்றில் முதல் கருப்பொருள்களுக்கே சிறப்பிடம் கொடுத்துப் பேசப்படுகிறது. மிக நுட்பமான உள்ளுறை உவமமும் இறைச்சிப் பொருளும் ஆங்காங்கு கண்டு உணர்ந்து மகிழுமாறு அமைந்துள்ளன. ஆசிரியர் சங்க இலக்கியச் செய்யுள்களில் பெரிதும் பயிற்சியுடையவர் என்பதை அவரது உரைநடையால் காணமுடிகிறது. செய்யுள் இலக்கணம் கடந்த உரைநடைப் பாட்டு என்று சொல்லுமளவுக்குத் தொடர்கள் அமைந் துள்ளன. நீண்ட எச்சச் சொற்களால் கருத்தைத் தெளிவுறுத்தும் பாங்கு இவ்வாசிரியர்க்கே கைவந்த கலையாக அமைந்து நம்மை எல்லாம் வியக்க வைக்கிறது.
சங்கக் காலத்தில் வழக்கிலிருந்த சொற்களை நினைவுறுத்தும் பாங்கில் அரிய சொற்களைத் தமது உரைநடையில் கையாண்டு தமிழைப் பழம் பெருமை குன்றாமல் காத்திட இவரது உரைநடை சிறந்த எடுத்துக் காட்டாகும் என்பதை இந்த அகநானூற்று உரைநடையைப் பயில்வார் உணர்வர் என்பது உறுதி.
அரிய நயம் மிக்க செந்தமிழ்த் தொடரையும் ஆசிரியர் தமது உரையில் தொடுத்துக் காட்டுகிறார். மெய்யின் நிழல் போலத் திரண்ட ஆயத்தோடு விளையாடி மகிழ்வேன் என்று 49 ஆம் பாடலில் குறிப்பிடு கிறார். மெய் - உண்மை அவரவர் நிழல் அவரவரை விட்டுப் பிரியாது அது போல தலைவியை விட்டுப் பிரியாத தோழியரோடு தலைவி விளையாடி யதை எண்ணி மகிழலாம்.
உப்புவிற்கும் பெண் ‘நெல்லுக்கு வெள்ளுப்பு’ என்று கூவிக் கை வீசி நடக்கிறாள். பண்ட மாற்று முறையை இது நமக்கு உணர்த்துகிறது.
நீனிற வண்ணன் குனியா நின்ற ஆயர் பெண்களின் துகிலை எடுத்துக் கொண்டு குருந்தமரத் தேறினானாகப் பானிற வண்ணன் இடையர் குலப் பெண்களின் மானத்தைக் காக்கக் குருந்த மரக் கிளையைத் தாழ்த்தித் தழைகளால் மறைத்துக் காத்தான் என்று கூறும் வரலாற்றைப் பாலைத் திணைச் செய்யுள் 59 இல் கூறியிருப்பது எண்ணி மகிழத்தக்கது. பெண் யானை உண்பதற்கு ஆண் யானை யாமரத்தின் கிளையைத் வளைத்துத் தாழ்த்தித் தருவதைக் கண்டும், மதநீர் ஒழுகும் கன்னத்தில் மொய்க்கும் வண்டுகளை ஓட்டும் தழைகளின் செயலையும் ஒருங்கு இணைத்துப் பார்த்துத் தலைவனின் தண்ணளியை எண்ணி ஆறி இருக்கலாம் என்னும் தோழியின் கூற்றை மிக ஆழமாக ஆசிரியர் விளக்கிய பாங்கு போற்றுதற்கு உரியதாம்.
அன்பன்
புலவர் த. ஆறுமுகன்
நூலறிமுகவுரை
திரு. ந.சி. கந்தையா பிள்ளை 1930-40களில் தமிழ், தமிழிலக்கியம், தமிழ்மொழி, தமிழர் வரலாறு, திராவிட வரலாறு, தமிழ்நாட்டுக் குடிகள் போன்ற பல விடயங்கள் பற்றி அக்காலத்துச் சாதாரண தமிழ் வாசகர் நிலையில் பெரிதும் வாசிக்கப்பட்ட நூல்களை எழுதினார். பண்டைய இலக்கியங்களான அகநானூறு, கலித்தொகை, பரிபாடல் போன்ற வற்றினை உரைநடையில் எழுதி மக்களிடையே சங்க இலக்கியம் பற்றிய உணர்வினை ஏற்படுத்தினார். திருக்குறளுக்கான ஒரு சொல்லடைவைத் திருக்குறள் அகராதி என்னும் பெயரில் வெளியிட்டவர். இவை யாவற்றுக்கும் மேலாக உலக வரலாற்று நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகக் காலவரிசைப்படுத்தித் தந்தார். செந்தமிழ் அகராதி என்றவோர் அகர முதலியையும் தொகுத்தார்.
இன்று பின்னோக்கிப் பார்க்கும் பொழுது 1940-50களில் இளைஞர் களாக இருந்த பல தமிழ் ஆர்வலர்கள் தமிழ் பற்றிய தங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதற்கான வாசிப்பு விடயங்களை அளித்தவர். இவருடைய பெரும்பாலான படைப்புக்கள் அக்காலத்திற் பிரசுரிக்கப் பட்ட ஒற்றுமை என்னும் இதழின் அலுவலகத்தாலேயே வெளியிடப் பெற்றன. இவர் வெளியிட்டனவற்றுள் பல ஒற்றுமை இதழில் வெளிவந் திருத்தல் வேண்டும். ஆனால், அதனை இப்பொழுது நிச்சயமாக என்னாற் சொல்ல முடியவில்லை. ஒற்றுமை அலுவலகம் இவற்றைப் பிரசுரித்தது என்பதை அறிவேன். ஏனெனில் இலங்கையில் தமிழாசிரியராக இருந்த எனது தகப்பனாரிடத்து இந்நூல்களிற் பெரும்பாலானவை இருந்தன.
திரு ந.சி. கந்தையா பிள்ளையின் பெயர் தமிழகத்திலே தொடர்ந்து போற்றப்படுமளவுக்கு ஈழத்தில் நினைக்கப்படுவதில்லை என்ற உண்மையை மிகுந்த மனவருத்தத்துடன் பதிவு செய்யவேண்டியுள்ளது. அங்கு அவர் அத்துணைப் போற்றப்படாதிருப்பதற்குக் காரணம் ஏறத்தாழ அவர்களது எல்லா நூல்களுமே தமிழகத்திலேயே வெளியிடப் பெற்றன.
இந் நூல்களின் பிரசுரப் பின்புலம் பற்றி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. அவற்றின் பொருளியல் அம்சங்கள் பற்றிய தரவுகளும் இப்பொழுது தெரியாதுள்ளன.
ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றிற்கூட இவரது பெயர் முக்கியப் படுத்தப் பெறாது போயுள்ளது. மிகுந்த சிரமத்தின் பின்னர் அவரைப் பற்றிக் கிடைத்துள்ள தகவல்கள் பின்வருமாறு:
சுவாமி ஞானப் பிரகாசர், ந.சி. கந்தையா பிள்ளை போன்ற அறிஞர்களின் தமிழ்ப் பங்களிப்புக்கள் தமிழகத்தில் போற்றப்படுகின்றமை ஈழத்தவர்க்குப் பெருமை தருகின்றது. இவர் எழுதிய நூல்களின் பெயரை நோக்கும்பொழுது தமிழ் வாசகர்களுக்கு உலக நிலைப்பட்ட, தமிழ்நிலைப் பட்ட தரவுகளைத் தொகுத்துத் தருவதே இவரது பெருஞ்சிரத்தையாக இருந்தது என்பது புலனாகின்றது. இப்பதிப்பகத்தின் பணியினை ஊக்குவிக்க வேண்டியது தமிழ்சார்ந்த நிறுவனங்களினதும் தமிழ்ப் பெரியோர்களினதும் கடமையாகும். உண்மையில் இதனை ஒரு அறிவுப்பசிப் பிணித் தீர்வாகவே நான் காண்கிறேன்.
2/7, றாம்ஸ்கேட், அன்புடன்
58, 37ஆவது ஒழுங்கை,
கார்த்திகேசு சிவத்தம்பி
வெள்ளவத்தை, தகைசார் ஓய்வுநிலை பேராசிரியர்
கொழும்பு - 6 யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.
கருவிநூல் தந்த ந.சி. கந்தையா
தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மூலவர்களில் யாழ்ப்பாணம் தந்த பேரறிஞர் ந.சி. கந்தையாவும் ஒருவர். உண்மையான அறிஞர்களைக் காலங்கடந்து அடையாளம் காண்பதும் அவர்தம் படைப்புக்களைத் தேடிப் பிடித்துப் புரப்பதும் தமிழினத்தின் பழக்கங்களில் ஒன்று.
தமிழின், தமிழரின் தொல்பழங்கால வரலாறு தொடர்பாகத் தமிழில் நூல்கள் மிகக் குறைவு. ஓர் ஆயிரம் நூல்களாவது தமிழின் தமிழரின் தொல்பழங்கால வரலாறுபற்றி வெளிவரவேண்டும். விரிவாக எழுதப்பட வேண்டிய தமிழ், தமிழர் வரலாற்று வரைவு முயற்சிக்கு வழிகாட்டும் கருவி நூல்களை வரைந்திருப்பவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.
உலகம் முழுவதும் உற்றுக் கவனிக்க வேண்டிய வரலாற்றிற்கு உரியவர்கள் தமிழர்கள். அவர்களே உலக மொழிகளை ஈன்ற மூலமொழிக்குச் சொந்தக்காரர்கள். அவர்களே உலக நாகரிகங்களின் பிறப்பிற்குக் காரணமான உலக முதல் நாகரிகத்தைப் படைத்தவர்கள். இந்த உண்மைகளைத் தமிழர்களும் அறியவில்லை உலகமும் அறியவில்லை.
தமிழர் சரித்திரம், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந் தமிழர், தமிழர் யார், உலக நாகரிகத்தில் தமிழர்பங்கு, சிந்துவெளித் தமிழர், தமிழ் இந்தியா, தமிழகம், மறைந்த நாகரிகங்கள் ஆகியன ந.சி. கந்தையாவின் குறிப்பிடத்தகுந்த நூல்களாகும்.
உலக முதல் நாகரிகம் என இன்று உலகம் நம்பிக்கொண்டிருக்கக் கூடிய நீல ஆற்றங்கரை நாகரிகம் (Nile Civilisation) தமிழ் நாகரிகத்தின் அதாவது சிந்துவெளி நாகரிகத்தின் வழிப்பட்ட நாகரிகமே என்பதை ஏராளமான சான்றுகளால் விளக்குபவை மேலைய நூல்கள்.
மொழிநிலையில் தமிழின் உலக முதன்மையைப் பாவாணர் நிலைநாட்டினார் என்றால் இன நிலையில் தமிழின உலக முதன்மையை ந.சி. கந்தையா நிலைநாட்டினார் என்று உரைக்கலாம்.
நீல ஆற்றங்கரை நாகரிக முடிவின்பின் நண்ணிலக் கடற் பகுதியில் உருவான பிறிதொரு வழிநாகரிகமே கிரேக்க நாகரிகம். கிரேக்க நாகரிகத் தின் உடைவில் தெறிப்பில் பிறகு மலர்ந்தவையே இன்றைய மேலை நாகரிகம். உலகின் எல்லா நாகரிகங்களையும் தாங்கிநிற்கும் தாய் நாகரிகமே தமிழ் நாகரிகம்.
தமிழ் நாகரிகத் தொன்மையைச் சங்க நூல்களுக்கு அப்பால் சிந்துவெளி அகழ்வாய்வும் உலக வரலாற்றாசிரியர்கள் உலக முதல் நாகரிகம் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துக்களும் நமக்கு மேலும் விளக்கும் பகுதிகளாகத் திகழ்கின்றன. இங்கெல்லாம் சென்று நுண்மாண் நுழைபுல முயற்சியால் தமிழின வரலாறு எழுதியவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.
ந.சி. கந்தையா பெருமகனார் நூல்களைத் தமிழரின் தொல்பழங்கால வரலாற்றைக் கற்கும் முயற்சியில் நான் ஈடுபடத்தொடங்கியபோது தேடிக் கற்றேன். பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் சென்ற ஆண்டு இயற்கையெய்திய வரலாற்றுப் பேரறிஞர் கோ. நிலவழகனார் ந.சி. கந்தையா அவர்களைச் சென்னையில் அவர் வாழ்ந்த நாளில் சந்தித்தது பற்றியும் அவரின் பன்னூற்புலமை பற்றியும் எம்மிடம் மகிழ்ந்து கூறுவார். ந.சி. கந்தையா அவர்களின் நூல்கள் பலவற்றையும் அவர் வைத்திருந்தார். அருகிய பழைய நூல்களைப் பேணுவாரிடத்திலும் நூலகங்கள் சிலவற்றிலும் மட்டுமே ஒடுங்கிக்கிடந்த ந.சி. கந்தையா நூல்களை மீண்டும் அச்சில் வெளியிடுவார் இலரே என்று கவலையுற்றேன். அமிழ்தம் பதிப்பகம் இவரின் நூல்களை வெளியிடுகின்றது. உண்மைத் தமிழ் நெஞ்சங்கள் இந் நூல்களை உச்சிமோந்து வாரியணைத்துப் புகழ்ந்து கற்றுப் பயனடைவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.
பேரா. கு. அரசேந்திரன்
பதிப்புரை
வளம் சேர்க்கும் பணி
“குமரிநாட்டின் தமிழினப் பெருமையை நிமிரச் செய்தான்,” “சிந்தையும் செயலும் செந்தமிழுக்கு சேர்த்த நூல் ஒன்றா இரண்டா” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் போற்றப்பட்ட தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையாவின் நூல்களை மீண்டும் மறுபதிப்புச் செய்து தமிழ் உலகிற்கு வளம் சேர்க்கும் பணியைச் செய்ய முன் வந்துள்ளோம்.
இப்பெருமகனார் எழுதிய நூல்கள் அறுபதுக்கு மேற்பட்டவை யாகும். இந்நூல்கள் சிறிதும் பெரிதுமாக உள்ளவை. இவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து இருபதுக்கு மேற்பட்ட நூல் திரட்டுகளாகத் தமிழ் உலகிற்குக் களமாகவும், தளமாகவும் வளம் சேர்க்கும் வைரமணி மாலை யாகவும் கொடுத்துள்ளோம். மொழிக்கும் இனத்திற்கும் அரணாக அமையும் இவ்வறிஞரின் நூல்கள் எதிர்காலத் தமிழ் உலகிற்குப் பெரும் பயனைத் தரவல்லன.
ந.சி. கந்தையா
இவர் 1893இல் தமிழீழ மண்ணில் நவாலியூர் என்னும் ஊரில் பிறந்தவர். பிறந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்து அவ்வூரிலேயே ஆசிரியப் பணியாற்றியவர். பின்னர் மலேசிய மண்ணில் சிலகாலம் தொடர்வண்டித் துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் ஈழ மண்ணில் பிறந்திருந்தாலும் தமிழகத்தில் இருந்துதான் அவர் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் நூல்கள் பல எழுதினார் என்று தெரிகிறது.
தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களில் ந.சி. கந்தையா குறிப்பிடத்தக்கவர். தன்னை முன்னிலைப் படுத்தாது மொழியையும் இனத்தையும் முன்னிலைப்படுத்திய பெருமைக்குரியவர். உலக மொழி களுள் தமிழ்மொழி தொன்மைமிக்கது. உலகமொழிகளுக்கு வேராகவும் சாறாகவும் அமைந்தது. தமிழர் சமயமும், கலையும் பண்பாடும், வரலாறும், தமிழன் கண்ட அறிவியலும் உலகுக்கு முன்னோடியாகத் திகழ்வன. இவற்றையெல்லாம் தம் நுண்ணறிவால் கண்டறிந்து பல நூல்களை யாத்தவர்.
தமிழியம் பற்றிய ஆய்வை ஆராய்ந்த அறிஞர்கள் பலருளர். இவர்கள் அனைவரும் கலை, இலக்கியம், சமயம், மொழி, வரலாறு, நாகரிகம், பண்பாடு போன்ற பல துறைகளில் பங்காற்றியுள்ளனர். ஆனால், ந.சி.க. இத் துறைகளில் மட்டுமன்றிப் பொது அறிவுத் துறையிலும் புகுந்து புத்தாக்கச் செய்திகளைத் தமிழ் உலகிற்குக் கொடுத்தவர். இவருடைய மொழிபெயர்ப்பு படிப்பாரை ஈர்க்கக் கூடியவை. படித்தலின் நோக்கம் பற்றியும் பல்வேறு பொருள் பற்றியும் கூறுபவை. தமிழ் அகராதித் துறையில் இவர் எழுதிய காலக்குறிப்பு அகராதி தமிழ் உலகிற்குப் புதுவரவாய் அமைந்தது.
தமிழ் மொழிக்கு அரிய நூல்களைத் தந்தோர் மிகச் சிலரே. நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகளும், தமிழ் மலையாம் தேவநேயப் பாவாணரும் தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் சேர்க்கத்தக்க நூல்களைத் தமிழர்களுக்கு வைப்பாக எழுதிச் சென்றவர்கள். அவர் தம் வரிசையில் இவர் தம் நூல்களின் வரிசையும் அடங்கும். தமிழ் ஆய்வு வரலாற்றில் இவரின் பங்களிப்பு குறிக்கத்தக்கது. கழகக் காலச் செய்தி களைப் படித்துப் பொருள் புரிந்து கொள்வது பலருக்குக் கடினமாக இருந்தது. இவற்றை எளிதில் படித்துப் பொருள் புரியும் உரைநடைப் போக்கை முதன்முதலில் கையாண்டவர். இவரது மொழிநடை, கருத்துக்கு முதன்மை தருபவை. உரைநடை, எளிமையும் தெளிவும் உடையது. சிறுசிறு வாக்கிய அமைப்பில் தெளிந்த நீரோடை போன்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னகம் பெற்றிருந்த நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளைக் கண்ணுக்குக் காட்சியாகவும் படிப்பாரின் கருத்துக்கு விருந்தாகவும் அளித்தவர்.
நூல் திரட்டுகள் நுவலும் செய்திகள்
1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் காலம் தொட்டு இவர் வாழ்ந்த காலம் வரை தமிழரின் வரலாற்றுச் சுவடுகளை நுட்பமாக ஆராய்ந் துள்ளார். அவர் மறைவிற்குப் பிறகு இன்று வரை அவருடைய ஆய்விற்கு மேலும் ஆக்கம் தரும் செய்திகள் அறிவுலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வலுவாய் அமைந்துள்ளன. தமிழும் சிவநெறியும் ஓங்கியிருந்தமை. - தாயாட்சிக் காலம் முதன்மை பெற்றிருந்தது. மொழியின் தோற்றம், சமற்கிருதம் எப்படித் தோன்றியது - ஆரியர் யார் - இந்தியாவிற்கு எப்படி வந்தனர் - தமிழரோடு எவ்வாறு கலப்புற்றனர் - ஆதிமக்களின் தோற்றமும், பிறப்பும் - இந்திய நாட்டின் ஆதிமக்கள், திராவிட மக்கள் - ஆதிமக்கள் பிறநாடுகளில் குடிபெயர்ந்தது - மொழிக்கும், சமயத்துக்கும் உள்ள உறவு - சமற்கிருதம் சமயமொழி ஆனதற்கான ஆய்வுகள் - வழிபாட்டின் தொடக்கம் - வழிபாடு எங்கெல்லாம் இருந்தது - பண்டைய மக்கள் எழுது வதற்குப் பயன்படுத்திய பொருள்கள் - மேலை நாடுகளிலும், சென்னை யிலும் இருந்த நூல் நிலையங்கள் - ஆரியமொழி இந்திய மண்ணில் வேரூன்றிய வரலாறு - தமிழுக்கு நேர்ந்த கேடுகள் - திருவள்ளுவர் குறித்த கதைகள் - வள்ளுவச் சமயம் - பண்டைய நாகரிக நாடுகள் - அந்நாடுகளில் பெண்களைப் பற்றிய நிலை - அகத்தியர் பற்றிய பழங்கதைகள் - திராவிட மொழிகள் பற்றிய குறிப்புகள் - உலகநாடுகளில் தமிழர் நாகரிகச் சுவடுகள் - திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் - திராவிடரின் பிறப்பிடம் - ஐவகை நிலங்கள், பாகுபாடுகள் - பழக்க வழக்கங்கள் - சிந்து வெளி நாகரிக மேன்மை - புத்தரின் பிறப்பு - அவரைப் பற்றிய கதைகள் - இராமகாதை பற்றிய செய்திகள் - தென்னவரின் குலங்கள், குடிகள், வடவரின் குலங்கள், .குடிகள் - தமிழின் பழமை, தமிழக எல்லை அமைப்பு - பண்டைக்கால கல்வி முறை, உரைநடை - வேதங்கள், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் - நீர்வழி, நிலவழி வணிகம் சிறந்தோங்கிய நிலை - மலைவழி, கடல்வழி, நிலவழி பொருள்கள் நிரம்பிய காலம் - சுற்றம் தழைக்க வாழ்ந்த நிலை - தமிழ வணிகர், வேற்று நாட்டு வணிகருடன் தொடர்பு கொண்டு மிக்கோங்கியிருந்த காலம் - வானநூல் கலையும், சிற்பக் கலையும், கட்டடக் கலையும் , இசைக்கலையும் மிக்கோங்கியிருந்த காலம் - ஆரியர் வருகைக்கு முற்பட்ட பிறமொழி கலப்பற்ற தூய தமிழ் பெருகி யிருந்த காலம் - உலக நாகரிகங்களுக்குத் தமிழர் நாகரிகம் நாற்றங்கால் - உலகப் பண்பாடுகளுக்குத் தமிழர் பண்பாடு தொட்டிலாக அமைந்தமை - அகராதிகள் - அறிவுத் தேடலுக்குரிய செய்திகள் - இவர்தம் நூல்களின் உயிர்க்கூறுகளாக அடங்கியுள்ளன.
வாழும் மொழி தமிழ்
தமிழ் இளைஞர்கள் தம் முன்னோரின் பெருமையை உணர, எதிர்கால வாழ்விற்கு ஏணிப்படிகளாய் அமைவன இந்நூல்கள். எகிப்திய மொழி, சுமேரிய மொழி, இலத்தீனும், பாலியும் கிரேக்கமும் அரபிக் மொழியும் வாழ்ந்து சிறந்த காலத்தில் தமிழ் மொழியும் வாழ்ந்து சிறந்தது. பழம்பெரும் மொழிகள் பல மாண்டும் சில காப்பக மொழிகளாகவும் அறிஞர்களின் பார்வை மொழியாகவும் இருந்து வரும் இக் காலத்தில் இன்றளவும் இளமை குன்றா வளம் நிறைந்த மொழியாக தமிழ் மொழி வாழ்கிறது என்று நாம் பெருமைகொள்ளலாம்.
ஆனால், இத்தமிழ் மொழியின் நிலை இன்று ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக, இசைமொழியாக, கல்வி மொழியாக, அறமன்ற மொழியாக , வழிபாட்டு மொழியாக, குடும்ப மொழியாக இல்லாத இரங்கத் தக்க நிலையாக உள்ளது. தாய்மொழியின் சிறப்பைப் புறந்தள்ளி வேற்றுமொழியைத் தூக்கிப் பிடிக்கும் அவல நிலை மிகுந்துள்ளது. முகத்தை இழந்த மாந்தன் உயிர்வாழ முடியாது. எப்படி உயிரற்றவனோ, அவ்வாறே மொழியை இழந்த இனம் இருந்த இடம் தெரியாமல் அழியும் என்பது உலக வரலாறு காட்டும் உண்மை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் மொழியை அழித்தால்தான் இனத்தை அழிக்க முடியும். உலக மக்களெல்லாம் தம் கையெழுத்தைத் தம் தம் தாய்மொழியில் போடுவதைப் பெருமையாகக் கொள்வர். ஆனால் தமிழ் மண்ணின் நிலையோ? எங்கணும் காணாத அவலம் நிறைந்தது. மொழியையும் இனத்தையும் உயர்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் உன்னதத்தையும் தாழ்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் தாழ்வுற்று இருப்பதையும் தமிழர்கள் இனியேனும் அறிவார்களா?
தமிழர்களின் கடன்
இளம் தலைமுறைக்கும் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க இவ்வரிய நூல்களைத் தொகுத்து 23 திரட்டுகளாகக் கொடுத்துள்ளோம். தமிழ் மொழியின் காப்புக்கும், தமிழரின் எழுச்சிக்கும் வித்திடும் இந்நூல்கள். தமிழர் யார், எதிரிகள் யார் எனும் அரிய உண்மைகளைக் கண்டு காட்டும் நூல்கள். இவரின் பேருழைப்பால் எழுதப்பட்ட இந் நூல்கள் பழைய அடையாளங்களை மீட்டெடுக்கும் நூல்கள். தமிழர் களுக்குள்ள பலவீனத்தை உணர்வதற்கும் பலத்தை உயிர்ப்பிப்பதற்கும் உரிய நூல்களாகும். இந் நூல்களைத் தேடி எடுத்து இளந்தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இவற்றைக் காப்பதும் போற்றுவதும் தமிழர்கள் கடன்.
மாண்டுபோன இசுரேல் மொழியையும் பண்பாட்டையும் மீட் டெடுத்த இசுரேலியர்களின் வரலாறு நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. உலக மக்களுக்கு நாகரிகம் இன்னதெனக் காட்டியவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் உழவுத் தொழிலையும் கடல் வாழ்வையும் வளர்த்த வர்கள் தமிழர்கள். முதன்முதலில் வீடமைப்பும், தெருவமைப்பும் நகரமைப்பும் நாடமைப்பும் கண்டவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் மொழியும் கலையும் ஆட்சிப் பிரிவுகளும், சட்டங்களும் பிற கூறுகளும் வகுத்தவர்கள் தமிழர்கள்.
எழுச்சிக்கு வித்திட…
உடம்பு நோகாமல் கை நகத்தின் கண்களில் அழுக்குபடாமல் தமிழகக் கோயில்களைச் சாளரமாகக் கொண்டு வாழும் கூட்டத்தால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் விளைந்த சீரழிவை இற்றைத் தலைமுறை அறிதல் வேண்டும். மறுமலர்ச்சிக்கும் உரிமைப் போருக்கும் உன்னத எழுச்சிக்கும் அந்தந்த நாடுகளில் இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற வரலாறு நம் கண்முன்னே காட்சியாகத் தெரிகிறது. அயர்லாந்து, செர்மனி, துருக்கி, சப்பானின் அன்றைய நிலையும், இன்றைய நிலையும் - தமிழ் இளைஞர்கள் படித்தால்தான் நம்நாட்டின் எழுச்சிக்கு வித்திட முடியும் என்பதை இந்நூல்களின் வாயிலாக உணர முடிகிறது.
இந் நூல் திரட்டுகள் வெளிவருவதற்கு எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் சென்னை வாழ் புலவரும், வடசென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையின் செயலாளர், நிறுவனருமான புலவர் கோ. தேவராசன், மு.க.,க.இ., ஆவார். இவரின் பேருதவியால் முழுமையாக நூல்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடையாகக் கொடுத்துள்ளோம். அவருக்கு எம் நன்றி. இந்நூல்களைப் பொருள் வாரியாக பிரித்துத் திரட்டுகளாக ஆக்கியுள்ளோம். ஒவ்வொரு திரட்டிற்கும் தக்க தமிழ்ச் சான்றோரின் அறிமுக உரையோடு வெளியிடுகிறோம். இவர்களுக்கு என் நன்றி என்றும். இந் நூலாக்கப் பணிக்கு உதவிய கோ. அரங்கராசன், மேலட்டை ஆக்கத்திற்கு உதவிய பிரேம், கணினி இயக்குநர்கள் சரவணன், குப்புசாமி, கலையரசன், கட்டுநர் தனசேகரன், இந்நூல்கள் பிழையின்றி வெளிவர மெய்ப்புத் திருத்தி உதவிய புலவர் சீனிவாசன், புலவர் ஆறுமுகம், செல்வராசன் ஆகியோருக்கும் மற்றும் அச்சிட்டு உதவிய ‘ப்ராம்ட்’ அச்சகத்தார் மற்றும் ‘வெங்க டேசுவரா’ அச்சகத்தாருக்கும் எம் பதிப்பகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதிப்பகத்தார்
தமிழ்க் கடவுளுக்கு ஆரியப் படையலா ?
முன்னுரை
இன்று பலவகைக் கிரியைகளோடும் ஆடம்பரங்களோடும் சமயம் என்னும் தலைப்பின் கீழ் நடைபெற்று வருவன சமயத் தொடர்பற்றன. அவை ஆதிகாலம் முதல் பழைய மந்திர வித்தைக்காரர், பூசாரிமார்களால் கையாளப் பட்ட சில பழக்க வழக்கங்களின் நிழல்கள். உண்மையான சமயம் என்பது உலகம், கடவுள், உயிர் என்னும் முப்பொருள்களின் இயல்புகளை ஆராய்ந்து அறிவால் உயர் வெய்துவது. இன்று சைவ சித்தாந்தம் என்று வழங்கும் சமயக் கருத்துக்களே வரலாற்றுக் காலத்துக்கு முன்தொட்டுவரும் தமிழரின் மதக் கொள்கைகளாகும் என டாக்டர் போப்பையர் தனது திருவாசக மொழிபெயர்ப்பில் ஓரிடத்திற் கூறியுள்ளார். தமிழரின் உண்மையான சமயக்கொள்கை “ஞானத்தினால் வீடு” என்பதேயாகும். இன்று மக்கள் “மூடத்தனத்தினால் வீடு” என்று சொல்லும் படியாக உழன்று வருகின்றனர். கிரியைகள் புரிவதாலும், பொங்கல், படையல். பலிகள் இடுவதினாலும், குடைகள், ஆபரணங்கள், வாகனங்கள் முதலியவை களைக் காணிக்கையாகக் கொடுப்பதினாலும், கொட்டு முழக்கு, ஆடல் பாடல் முதலிய ஆரவாரங்களோடு விழாக்கள் எடுப்பதினாலும் கடவுளை ஏமாற்றிவிட முடியாது. இவைகள் எல்லாம் மக்களை மேலும் மேலும் அறியாமையில் ஆழ்த்துவன. இவ்வியல்புகளை மக்கள் அறியா திருக்கும்படி புரோகிதரும், பூசாரிகளும் விழிப்பாயிருந்து, அவர்களுக்கு நாளுக்கு நாள் அறியாமையை வளர்த்து வருகின்றனர். இவ்வறியாமை ஒழியும் பொருட்டும், சமயம் என்றால் என்ன என்பதை மக்கள் அறியும் பொருட்டும், இச் சிறு நூல் வெளியாகின்றது.
சென்னை
23.1.1947
ந.சி.கந்தையா.
தமிழ்க் கடவுளுக்கு ஆரியப் பாடலா?
தோற்றுவாய்
தமிழை வளர்க்க வேண்டும். தமிழில் பலவகை நூல்கள் வெளிவர வேண்டும். தமிழ் வளர்ச்சிக்குத் தடையாயிருப்பவைகளைத் தகர்க்க வேண்டும் என்பவை போன்ற உணர்ச்சி தமிழ்நாடு எங்கும் சுடர்விட்டெரி கின்றது. ஒருவனுக்கு நோய் கண்டால் அந் நோயின் காரணத்தை அறிந்து தக்க மருந்து அளித்தாலன்றி நோய் குணமடையாது. அதுபோலவே தமிழ் வளர்ச்சி தடைப்படுவதற்குக் காரணம் எதுவென அறிந்து அக் காரணத்தைக் களைந்தாலன்றி, தமிழ் செவ்வனே வளர்ச்சி யுறமாட்டாது. ஒரு வயலுள் கோரை, நாணல் முதலியவை வளருமாயின், அவை நெற்பயிர் செவ்வனே வளர்ந்து நல்ல கதிர்களை ஈனுவதற்குத் தடையாகும். நெற்பயிர் பயன் அளிக்க வேண்டுமாயின், அதனூடே வளரும் களைகளைக் களைதல் வேண்டும்; வேறு எவ்வித உபாயங்களைக் கையாளினும் பயனற்றதாகும்.
சமயம் மக்களுக்கு உயிர்நாடி போன்றது. மன்னாதி மன்னரும் வீராதி வீரரும் சமயம் என்னும் பெயரைக் கேட்டவுடன் தலை வணங்குகின்றார்கள். சமயத்துக்கு இருப்பிடம் கோயில். தமிழ்மக்கள் வழிபடும் கடவுளர் தமிழ்க் கடவுளரே. தமிழ்க்கடவுளர் கோயில் கொண்டருளியிருக்கும் ஆலயங்களில் ஆரியம், நுழைந்து கொண்டு தமிழை வெளியே துரத்திவிட்டது. ஆலயங்களில் பணி செய்யும் பூசாரி, தான் ஆரியன் என்கின்றான்; ஆரியம் பாடுகின்றான்; அவன் தமிழ் பாடுவதில்லை. தேசிகர், ஓதுவார், பண்டாரங்கள் முதலிய தமிழ் பாடுவோர் ஆரியம் பாடும் பூசாரியினும் பார்க்கத் தாழ்ந்தவர்கள் என மதிக்கப் படுகிறார்கள். அவர்கள் வெளியே நின்று தமிழ் பாடுகிறார்கள். இதனால் தமிழ் ஆரியத்தினும் பார்க்கத் தாழ்ந்ததென்பதும், ஆரியம் பாடும் பூசாரிகள் தமிழ்பாடும் ஓதுவார் தேசிகர்களினும் உயர்ந்த வரென்பதுமாகிய கருத்துக்கள் ஆலயங்களில் தோன்றி வலி பெற்றுள்ளன. இக் கருத்துக்களை ஆலயங்களில் நடைபெறும் பல செயல்களைக் கொண்டு நாம் நாளும் அறியலாகும். இவைகளைக் காணும் உண்மைத் தமிழனின் இரத்தம் கொதிக்காமல் இருக்க முடியாது. மக்களிடையே தோன்றி எழும் தமிழ் உணர்ச்சி ஆலயங்களில் நசுக்கப்படுகின்றது. இந் நிலையில் தமிழ் உணர்ச்சி தலை எடுப்பது எவ்வாறு? தமிழ்க் கடவுளருக்கு ஆரியம் பாடுதல் அறி வுடையார் செயலாகத் தோன்ற மாட்டாது. ஆலயங்கள் முற்காலத்தில் பல்வகைக் கலைகளுக்கும் இருப்பிட மாயிருந்தன. இவ் வாலயங்களில் ஆரியத்தை ஓட்டித் தமிழ் முழங்கும்படி செய்யின், தமிழ் எளிதில் வளர்ச்சியுறும் என்பதில் சந்தேகம் இல்லை. இக் கருத்துக்கு அடிப்படையா யுள்ள பல காரணங்களை ஆராய்ந்து முறையே கூறுகின்றது இச் சிறிய நூலென்க.
மொழிக்கும் சமயத்துக்கும் உள்ள உறவு
மொழிக்கும் சமயத்துக்கும் நெருங்கிய உறவு உண்டு. ஒவ்வொரு மதத் தினரும் தமது சமய நூல்கள் எம் மொழியில் உள்ளனவோ, அம் மொழியைக் கடவுள் மொழியாகக் கொண்டு அதனைத் தம் தாய் மொழியினும் மேலாகக் கருதி வருகின்றனர். ஒரு நாட்டில் தோன்றிய மதம், இன்னொரு நாட்டில் பரவும்போது, அந் நாட்டினர் அம் மத நூல்களில் எழுதப்பட்டிருக்கும் மொழியைப் பயில்கின்றனர். இதனால் அவர்களது மொழியில் பிறமொழிச் சொற்கள் சிறிது சிறிதாக வந்து நுழைந்து அம் மொழியை மாற்றமடையச் செய்கின்றன.
கிறித்துவ வேதத்தின் பழைய ஏற்பாடு எபிரேய மொழியில் உள்ளது. அதனால் கிறித்துவர் எபிரேய மொழியைத் தெய்வமொழி எனக் கொண்ட தோடு அம் மொழியினின்றே உலகிலுள்ள மொழிகள் எல்லாம் தோன்றின என்றும் நம்பி வந்தார்கள். புத்தர் பாலிமொழியில் தனது போதனைகளைச் செய்தார். புத்தரின் போதனைகள் அடங்கிய புத்தவேதம் பாலிமொழியில் எழுதப்பட்டுள்ளது. அதனால் புத்த மதத்தினர் பாலிமொழியைச் சமய மொழி யாகவும், கடவுள் தன்மை யுடையதாகவும் கொள்கின்றனர். இலங்கைத்தீவில் வழங்கிய எலு என்னும் பழைய மொழி, பாலிச் சொற்களையும் அதன் சிதைவுகளையும் ஏற்றுக்கொண்டு சிங்களமாக மாறிற்று, முகமது மதத்தினர் அரபி மொழியைத் தமது சமய மொழியாகக் கொள்கின்றனர். முகமது நபியின் போதனைகள் அடங்கிய முகமதியர் வேதம், அரபி மொழியில் எழுதப்பட்டிருப்பதே இதற்குக் காரணம், கான்பியூசஸ், சீன மக்களுக்குச் சமய போதனை செய்த சீனமொழி, கடவுள் தன்மை யுடையதெனச் சீனர் கூறுவர். பழைய எகிப்தியர், பாபிலோனியர் முதலியோரும் தமது மொழிகள் கடவுள் தொடர்பும் கடவுள் தன்மையும் உடையனவென்று நம்பி வந்தார்கள். கிறித்துவ கத்தோலிக்க மதத்தினர் இலத்தின் மொழியைத் தமது சமய மொழியாகக் கொள்வர். ஆகவே, அவர்கள் அதனைக் கடவுள் தன்மையும் புனிதமும் உடையதாகக் கொள்வர்.
இவ்வாறு பற்பல மொழிகளைச் சமய மொழிகளாகக் கொண்ட மதங்கள் பிறநாடுகளில் பரவும்போது மொழிக் கலப்புச் சமயக் கலப்புக்கள் உண்டாவது இயல்பாகின்றது.
ஆரியம் தென்னாட்டிற் சமயமொழியானது எவ்வாறு?
ஆரியம் பிறநாடுகளினின்றும் வந்து இந்திய நாட்டை அடைந்ததென அறிகின்றோம். வடநாட்டை அடைந்த ஆரிய மக்களின் சமயமொழி ஆரிய மாக இருந்தது. அம் மொழியில் அவர்கள் சமய நூல்கள் எழுதப்பட்டுள்ளன. கிறித்துவ, முகமதிய, புத்த, சைவ மதங்களைப் போலவே, ஆரிய மதமும் தென்னாட்டை அடைந்தது. முற்கால அரசர், மந்திர வித்தைகளால் போரில் வெற்றி, செல்வம், அதிகாரம் என்பவைகளைப் பெறலாம் என நம்பினார்கள்.1 வடக்கினின்றும் வந்த ஆரியப் பிராமணர், யாகங்களினால் போர்களில் வெற்றியையும், பெருஞ்செல்வத்தையும் பெறலாம் எனக் கூறியதைத் தமிழ் அரசர் நம்பினர்; அவர்கள் மூலம் யாகங்கள் பலவற்றைச் செய்தனர். இதனால் பிராமணருக்கு அரச வட்டங்களில் மதிப்பு உண்டாயிற்று.2 பொதுமக்கள் அவர்களை மதிக்கவில்லை. பிராமணர் மற்றைய மதத்தவர்களைப் போலத் தனித்து நின்று தமது மதத்தைப் பரப்பமுடியவில்லை. அவர்கள் தமிழ்நாட்டுக் கோயிற் பூசகர்களாகிய பார்ப்பனரிடையே திருமணக் கலப்புக் கொண்டனர்; தமிழ்க் கடவுளரையும் வழிபட்டனர்; பார்ப்பனருடைய ஒழுக்கங்கள் சில வற்றையும் பின்பற்றினர்.3 இதனால் பார்ப்பனர் ஆரியச் சார்பு அடைந்தனர். அவர் தம்மை ஆரியர் எனக் கூறினர்; ஆரியத்தை ஆலயங்களில் நுழைக்க முயன்று வந்தனர். பொதுமக்கள் இதனை எதிர்த்துப் போராடினார்கள்.4 பிராமணர் அரசருக்கு மந்திரிகளாகவும், ஆசிரியராகவும் இடம் பெற்று அமர்ந்தார்கள். அவர்கள் அரசரைத் தம் வசப்படுத்திக் கொண்டு, பொது மக்கள் எதிர்த்து நின்ற பல செயல்களில் வெற்றியடைந்தார்கள்.1 பல்லவ சோழ அரசர்கள் பிராமணரைப் பெரிதும் ஆதரித்தனர். பிற்காலச் சோழ அரசர், தம்மை ஆரியர் எனவும் கூறுவாராயினர். இலங்கையின் வட பகுதியை ஆண்ட சோழ அரசமரபினர் தம்மை ஆரியச் சக்கரவர்த்திகள் எனக் கூறுவாராயினர். பிராமணரால் தம் வயம் ஆக்கப்பட்ட அரசர் காலங்களில் அரச கட்டளை யினால் ஆரியம் தென்னாட்டு ஆலயங்களில் இடம் பெறுவதாயிற்று. ஆயினும் தமிழை முற்றாக எடுத்துவிட முடியவில்லை. தமிழ்ப் பண்கள் பாடப்படவேண்டும் என்னும் விதியும் கிரியை முறைகளில் இடம் பெறுவதாயிற்று. இன்று ஓதுவார், தேசிகர் என்போர் தூரத்தில் நின்று தமிழ் பாடுகின்றனர். ஆலயங்களில் பூசாரிகளாக அமர்ந்துள்ள பிராமணப் பூசாரிகள், சித்தாந்த சாத்திரங்களிலோ, பண்முறையோடு தேவார திருவாச கங்கள் பாடுவதிலோ, தேர்ந்தவர்களல்லர். அவர்கள், தாம் தமிழர் அல்லர் எனவும் தமிழ் தமது மொழியன்று எனவும் கருதுபவர்களாவர், தமிழ்க் கடவுளல்லாதாரும், தமிழர் வழிபாட்டுக் குரியரல்லாதாருமாகிய ஆரியத் தெய்வங்கள் மீது, துதி கூறும் வடமொழி வேதங்களைத் தமக்குச் சமய நூல் களெனக் கூறுவோராவர்.
மொழி மக்கள் சமூகத்தை ஒன்று சேர்க்கின்றது
ஐக்கிய அமெரிக்கா முழுமையையும் ஒன்றுபடுத்தி இணைத்து வைப்பது ஆங்கிலமொழி. ஐக்கிய அமெரிக்காவையும் இங்கிலாந்து கனடா தேசங்களையும் இணைத்து வைப்பதும் ஆங்கில மொழியே ஆகும். மொழிப்பற்று எல்லா மக்களிடையும் மிகப் பதிந்துள்ளது. ஒருவன் எம் மொழியைத் தாய்மொழியாகக் கொள்கின்றானோ, அவன் அம் மொழியைத் தனது உயிர்போலக் கருதுகின்றான். இந்தி தமிழ்நாட்டில் கட்டாயக் கல்வியாக வேண்டும் என்னும் சட்டம் உண்டான போது, அதனால் தமிழருக்குத் தீமை நேருமென உணர்ந்த தமிழ்ப் பற்றுடைய பலர், இந்தி எதிர்ப்புச் செய்து சிறை செல்ல ஆயத்தமானார்கள். நாட்டை மொழிவாரியாகப் பிரிக்க வேண்டும் என்னும் கிளர்ச்சி உண்டாகின்றபோது, தமிழர் எல்லோரும் ஒன்று சேர்கின் றனர்; தெலுங்கர், மலையாளர் முதலிய மக்களும் தனித்தனி ஒன்று சேர்ந்து விழிப்படைகின்றனர். மொழிப்பற்று என்பது மனிதனுக்குத் தெரியாமல் உள்ளத்தில் உறைந்து கிடக்கும் ஒருவகை உணர்ச்சி. அது, தாய் தாலாட்டிப் பாலூட்டி வளர்க்கும்போதே மனிதனின் இரத்தத்தோடு கலந்து சுவறியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பனர் பிறந்த நாள் முதல் தமிழையே வழங்கு கின்றார்கள் ஆயினும், அவர்கள் தாம் தமிழர் அல்லர் என்றும், தமக்குத் தாய்மொழி தமிழன்று என்றும், தாம் ஆரியர் என்றும், தமது தாய்மொழி ஆரியம் என்றும் உணர்கிறார்கள். ஆகவே அவர்களிடத்தில் தமிழனிடத்தில் எழுவது போன்ற தமிழ்மொழிப்பற்றை நாம் காணுதல் முடியாது. இவ்வுணர்ச்சி குன்றிய கூட்டத்தினரே இந்திப் பிரசார சபைகளையும், வட மொழியைத் தமிழோடு கலந்து எழுதும்1 உரைநடைகளையும் தோற்றுவிக் கின்றனர்; இன்றும் புதிதாகச் செய்யப்படும் கலைச்சொற்களில் பல சமக்கிருதச் சொற்களைச் சேர்க்கவேண்டுமென வாதாடுகின்றனர். தமிழ்நாட்டில் பிராமண வகுப் பினருக்கும், அவர் அல்லாதாருக்கு மிடையில் அமைதி நிலவாமைக்குக் காரணம், இருவருக்கும் தாய்மொழி வெவ்வேறாக இருப்பதினாலேயாகும். தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட மக்கள் தோற்றுவித்த அற நிலையங்களுக்கு, வட மொழியைத் தாய்மொழி யெனக்கொண்டுள்ள மக்கள் தலைமை வகிப்பதன் ஒவ்வாமையைத் தமிழ் மக்கள் உணர்ந்து கண் விழித்துள்ளார்கள். தமிழனுக்குத் தமிழ் இசை பிடிக்காது; கருநாடக இசையும், இந்தி, தெலுங்குப் பாடல்களுமே பிடிக்கும் எனக் கூறி ஒரு கூட்டத்தினர் தமிழனை ஏமாற்றிய காலம் மலை ஏறிவிட்டது.
மக்கள் மொழி ஒன்றும், சமயமொழி இன்னொன்றுமானபோது, தமிழ் சிறிது சிறிதாகக் குன்றுவதாயிற்று.
சமயமும் மொழியும் நகமும் சதையும் போல் ஒன்றை விட்டு ஒன்று பிரிக்கப்படாமல் இருந்து வருவதை நாம் முன்பு விளக்கியுள்ளோம். தமிழர் வழிபடும் தமிழ்க் கடவுளருக்குத் தமிழ் மொழியில் துதி பாடுதலே தக்கது. அவ் வழக்கே இருந்துவந்தது. பிற்காலத்தில் மொழியும் சமயமும் பிரிக்கப்பட்டன. தமிழின் இடத்தை வடமொழி ஏற்றது. அப்பொழுது மொழி, நகம் போன விரல்போல் ஆயிற்று. நகம் போன விரலுக்குத் துன்பம் உண்டாவது போலச் சமயத்தினின்றும் பிரிக்கப்பட்ட தமிழுக்குப் பல இடையூறுகள் நேர்ந்தன. வடமொழியைக் கடவுள் மொழியாகக் கொண்ட கோயிற் பூசகர், “ஆரியம் நன்று; தமிழ் தீது” எனக் கூறுவாராயினர். இதனால் ஆரியம்-தமிழ் என்னும் இரு கட்சிகளுக்குகிடையில் பூசல்கள் நேர்ந்தன. நாள் ஏற ஏறப் பொது மக்கள் அறியாமை காரணமாக ஆரியம் கடவுள் மொழியென நம்பத் தலைப்பட்டனர். தமிழைப் புனிதமுடையதெனக் கருதாமையால், வடமொழிப் பற்றுடையார் வடமொழிச் சொற்கள் பலவற்றைத் தமிழோடு கலக்கலாயினர். தமிழ் கற்றோர்க்கு மதிப்பின்மையும், வடமொழி கற்றார்க்கு மதிப்பும் நாளடைவில் உண்டாயிற்று. இவ்வாறு வடமொழி சமயமொழியான காலம் முதல், தமிழ் சிறிது சிறிதாகத் தன் வலி இழந்து குன்றி வருகின்றது. முற்காலத் தமிழ் இலக்கியங்களைப் பின் நோக்கி ஆராய்ந்து செல்லச் செல்ல, அவைகளில் பிறமொழிச் சொற்கள் கலவாதிருத்தலையும், மொழியின் வளம் பெரிதாயிருத் தலையும் நாம் காணலாம்.
தமிழ்க் கடவுளருக்கு ஆரியப் பூசாரிகள் ஆரியம் பாடுவது நகைப்புக்கிடமானது.
தமிழ் நாட்டில் வழிபடப்படும் கடவுளர் ஒருவரேனும் வடநாட்டுக் குரியவரல்லர். இத் தமிழ்க் கடவுளருக்கு ஆரியர் பூசாரிகளாக இருந்து ஆரியம் பாடுதல் நகைப்புக்கு இடமானதாகும். அதனைக் கண்டு வாளா விருக்கும் தமிழ் மக்களின் செயல் மிக இரங்கத்தக்க தொன்றாகும். நந்தனார் நெருப்பில் முழுகிச் சிதம்பர ஆலயத்துள் நுழைந்தார் என்பன போன்ற கதைகள் இன்று வலிபெறவில்லை. ஒரு நந்தனாருக்குப் பதில் பல நந்தனார்கள் இன்று தமிழர் கோயில்களுள் நுழைந்து வருகிறார்கள். இவர்களைக் கண்டு கோயில்களிலுள்ள தெய்வங்கள் ஓட்டம் பிடிக்கவில்லை. கடவுளுக்கு ஆரியம் பாடினால் விளங்கும்; தமிழ்பாடினால் விளங்காது என்னும் மூடக் கொள்கை நீங்கும் காலம் தொலைவில் இல்லை. ஒரு மொழியை விளங்க மாட்டாத இன்னொரு மொழிக்காரனுக்கு இரு மொழிகளை அறிந்த ஒருவன் மொழிபெயர்ப்பாளனாக இருப்பதுபோல், தமிழ் மக்களின் எண்ணங்களைக் கடவுளர்களுக்கு ஆரிய மொழியில் கூறுகின்றோம் எனச் சொல்லி, இருபகுதி யினருக்கும் இடையில் தரகராக நின்று, நடிப்பது ஒரு சூழ்ச்சிக் கூத்தேயாகும். இந்த நடிப்புச் சூழ்ச்சியை அறிந்து, அவர்களை ஆலயங்களினின்றும் இவ் விருபதாம் நூற்றாண்டிலும் மக்கள் அகற்றா மலிருப்பது வியப்பினும் வியப்பே!
ஆலயங்கள் எவருக்கும் பொது; அங்கு
கட்டணங்களும் கட்டுப்பாடுகளும் ஆகா.
ஆலயங்கள் எவருக்கும் பொது. அவைகளில் கட்டணங்களோ, கட்டுப்பாடுகளோ கூடா. வேண்டியவர் வேண்டியபடி கடவுள் வழிபாடு செய்யும் உரிமை வேண்டும். இன்னது செய்ய இன்ன கட்டணம் என்னும் விதிகள் உடனே அகற்றப்படவேண்டும். வழிபடுவோரிடம் கட்டணம் தண்டும்படி எந்த ஆகமமும் கூறவில்லை. கோயிலில் வரி தண்டுவது “கிரிமினல்” குற்றச் சாட்டுக்களுள் ஒன்றாகக் கொள்ளும் சட்டம் உடனே தோன்ற வேண்டும். ஆலயங்களை அரசாங்கமோ, ஊர்ச் சபைகளோ நடத்த வேண்டும். கோயிலை மேற்பார்க்கும் “பார்ப்பார்” அல்லது பூசாரிகள், குலங் கோத்திர வேறு பாடுகளின்றி மக்களால் தெரிந்தெடுக்கப்பட வேண்டும். பூசாரியாயிருக்கும் உரிமை தலைமுறை தலைமுறையாக வருதல் கூடாது. உலகம் விரைவாக மாறுதல் அடைந்து வருகின்றது. இன்றைக்கு ஆயிரம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய வழக்கங்கள் இன்று பயனளியா. முற்காலத்தில் சமயத்தின் பெயரால் சிறந்த அறங்கள் என மக்கள் கருதிச் செய்யப்பட்டவை. இன்று மக்களைச் சிறைச்சாலைகளுக்கும் தூக்கு மரங்களுக்கும் போக்கும் கொடுங் குற்றங்களாக மாறியுள்ளன. தமிழ்த் தெய்வங்களுக்கு ஏன் ஆரியம் பாடவேண்டும் என்னும் கேள்வி ஏன் எழக் கூடாது? “தீண்டாதார்” ஆலயத்தில் புகலாம் எனச் சட்டம் பிறந்தது போல, இனித் தமிழர் ஆலயங்களில் ஆரியம் பாடுதல் ஆகாது; தமிழ்தான் பாடுதல் வேண்டும் என்னும் சட்டம் ஏன் பிறத்தல் ஆகாது? தமிழ்க் கடவுளுக்கு ஆரியன் ஏன் பூசாரியாக அமர்தல் வேண்டும்; தமிழன் ஏன் அமர்தல் ஆகாது?
பூசாரி என்பவன் யார்?
இவ்விடத்தில், பூசாரி என்பவன் யார்? அவன் எப்படித் தோன்றி னான்? அவன் ஏனையோரினும் எவ்வகையிலாவது உயர்ந்தவனா? அவன் தன்னை உயர்ந்தவனாகக் கருதுவதில் பொருள் உண்டா? என்பன போன்ற கருத்துக்களை விளக்க வேண்டி இருக்கின்றது. இறந்து போன பொது மக்கள், பெருமக்கள் சமாதிகளில் கோயில்கள் எடுக்கப்பட்டன.1 இறந்தவர்களின் ஆவிகளுக்குப் பலி செலுத்தும்பொருட்டு அடிமைகள் அல்லது வேலைக் காரர் நிறுத்தப்பட்டார்கள். இவர்கள் கால்வழி கால்வழியாகக் கோயில் களுக்குப் பலி செலுத்திவந்து பூசாரிகள் ஆயினர். இனிச் சமாதிகளல்லாது முழுமுதற் கடவுளின் அருட்குறியாக நிறுத்தப்பட்ட வடிவங்களுக்கும், மக்கள், பெருமக்களுக்குச் செய்வதுபோல் பலி செலுத்தியும் வந்தார்கள். அவ்வாறு பலி செலுத்துவதற்கு நியமிக்கப்பட்டவர்களும் கால்வழி கால் வழியாக அப் பணியைச் செய்து பெருகிப் பூசாரிக் குலத்தினராயினர். இவர்கள் மந்திரவித்தைக்காரராகவும் இருந்தனர். மந்திரவித்தை என்பது மனிதன் துதிகளாலும் மந்திரங்களாலும் தெய்வங்களை இயற்கை விதிகளுக்கு மாறாகவும், தனது விருப்பங்களுக்குச் சார்பாகவும் சிலவற்றைச் செய்யும்படி பணித்தல். தோத்திரங்கள் எனப்படுபவைகள் இவ்வகையினவே.2
ஆரியப் பூசாரிகள் மந்திரவித்தைக்காரர்களே
கடவுளர்களுக்கு, யாகங்களிலும், வேள்விகளிலும், கிரியைகளிலும் உணவு அளித்துத் துதி கூறுவதால், அவர்கள் மனிதனின் எண்ணங்களுக்கு வசப்பட்டு, அவர்கள் விரும்பியவைகளை எல்லாம் செய்துவிடுவார்கள் என்னும் நம்பிக்கையினாலேயே பலி செலுத்தும் யாகம் புரிதல் போன்ற கிரியைகள் தோன்றின. இவற்றின் விரிவை எம்மால் எழுதப்பட்ட ‘ஆரிய வேதங்கள்’ என்ற நூலில் காண்க. ஆரிய வேதங்களில் காணப்படும் துதிகள் இவ்வகையினவே. ஆரிய வேதங்களை அடிப்படையாகக் கொண்டு மந்திர வித்தைகளால் கடவுளர்களைத் தாம் விரும்பிய வண்ணம் ஏவித் தாம் விரும்பியவற்றைப் பெறலாம் என்னும் கொள்கையை முடிவாக உள்ளதே பிராமண மதம். இப் பிராமண மதக் கொள்கைகளையுடையவர்களே இன்று ஆலயப் பூசகர்களாயிருந்து வருகின்றனர். ஆலயங்களில் “ஆன்மார்த்த” மல்லாதனவும், உலகார்த்தமான வழிபாடுகளும் செயல்களுமே நடைபெறு தலை நாம் காண்கின்றோம். இதற்குப் பொறுப்பு ஆலயப் பூசகர்கள் அல்லரோ? ஆன்மார்த்தத்துக்குக் கட்டணங்களும் வரிகளும், தக்கணை களும் உண்டோ? மனிதன் மனவளர்ச்சியுறாது கிரியைகளாலும் மந்திர வித்தை களாலும் உயர்நிலை அடைய நினைத்தல், கையில்லாத ஊமன் கொம்பு விரும்பியது போலாகும்.
ஆரியச் சொற்களைத் தமிழில் நுழைப்பதால், தமிழ் வளர்ச்சியுறும் என்னும் தவறான கருத்து.
தமிழிலே சமக்கிருதச் சொற்களை நுழைத்தலால் தமிழ் வளம் பெறும் என ஒரு சாரார் கருதுகின்றனர்; கருதுவதல்லாமல் அக் கருத்தினை எதிர்ப் போர் தமிழ் வளர்ச்சியைத் தடுக்கின்றனர் எனக் கூறி வாதங்களும் புரிகின்ற னர். ஒவ்வொரு மொழிக்கும் சிறப்பான ஒலிகள் உண்டு. ஒரு மொழிக்குரிய வர்கள் இன்னொரு மொழிக்குரிய மக்களோடு கலக்கும்போது, ஒருவர் நாட்டில் காணப்படாத புதிய பொருள்கள் செயல்களைக் குறிக்கும் சொற்கள், மற்றவர் மொழியில் புகுதல் இயல்பு. அவ்வாறு புகுமிடத்து அவை மொழி பெயர்ப்பாக அல்லது மொழிக்கேற்ற உச்சரிப்பு முறையாகத் திருத்தி வழங்கப் படும். இவ்வாறே கீழ்நாட்டுச் சொற்கள் பல ஆங்கில மொழியிற் புகுந் துள்ளன. முற்காலத்தில் எகிப்திய, எபிரேய, கிரேக்க, உரோம மொழிகளில் புகுந்த தமிழ்ச்சொற்களும் அவ்வம் மொழிகளுக் கேற்ற ஒலிமுறையில் திரித்து வழங்கப்பட்டன. இதனால் அவை பிற மொழிச் சொற்களோ என ஐயப்படத் தக்கனவாயிருந்தன. புதிய பொருள்களையும் செயல்களையும் குறிக்கும் பழைய தமிழ்ச்சொல் இல்லாவிடின் மேற்கண்ட முறைப்படி சொற் களை ஆக்கித் தமிழில் சேர்க்கலாம். அப் பொருள்களையும் செயல்களையும் குறிக்கத் தமிழ்ச் சொற்கள் இருக்கும்போது, அவைகளுக்கப் பதில் பிற மொழிச்சொற்களை ஆளின், பழைய சொற்கள் வழக்கொழிவதால், நாளடைவில் மொழிவளர்ச்சி குன்றிவிடும். இன்று சில குழுவினர் பிற மொழிச் சொற்களை அம் மொழி உச்சரிப்புக்களோடு தமிழிற் புகுத்தி வருகின்றனர். இதனால் தமிழ் பெரிதும் சீர்கெட்டு வருகின்றது. தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளும் மக்கள் இவ்வாறு புரிய ஒருபோதும் இணங்கமாட்டார்கள்.
தோற்றத்தில் சமக்கிருதம்போல் தோன்றும் சொற்கள் எல்லாம் சமக்கிருதச் சொற்களா?
வடமொழியில் காணப்படும் சொற்கள் தமிழில் காணப்பட்டால், அவை வடமொழிச் சொற்கள் என வடமொழிப் பண்டிதர்கள் ஆராய்ச்சி யின்றிக் கூறி வருகின்றனர். வடமொழி, கடவுள் மொழி யாதலின், அது பிற மொழிகளினின்றும் சொற்களை இரவல் பெற மாட்டாது; கடவுள் மொழிக ளல்லாத பிற மொழிகளே சமக்கிருதத்தினின்றும் சொற்களை இரவல் பெறக் கூடியன என்பது அவர்கள் கருத்தாகும். இருமொழிக் குரியவர்கள் கலக்கும் போது, ஒருவர் மொழிச் சொற்களில் சில, மற்றவர் மொழியில் சென்று ஏறுதல் இயல்பேயாகும். முத்து, மிளகு, ஏலம் முதலியவைகளைக் குறிக்கும் பெயர்கள், தமிழிலிருந்து சமக்கிருதத்தால் இரவல் வாங்கப்பட்டுள்ளன. வட மொழியிற் காணப்படும் மிரிசா (மிரியல்-மிளகு) முத்தா, ஏலா முதலிய சொற்கள் தமிழிலிருந்து இரவல் பெற்றனவாகும். இவையல்லாமல் நீரம், மீனம் போன்ற பல சொற்களும் தமிழினின்று வட மொழியிற் சென்றுள்ளன. இவைகளை வட சொற்களென்றே சாதிக்கும் வடமொழிப் பண்டிதர்களுமுளர். ஆரியர் வருகைக்கு முன், நீர், மீன் என்பவைகளின் பெயர்களை அறியாது தமிழர் நீரைக் குடித்தார்கள்; மீனை உண்டார்கள்; பின்பு அவர்கள் ஆரிய ரிடமிருந்து அவைகளுக்குப் பெயர்களைக் கேட்டு அறிந்து கொண்டார்கள் எனக் கொள்ளலாகுமா? இவ்வாறு ஆரியப் போர்வையில் வடமொழியிற் சென்றுள்ள பல தமிழ்ச்சொற்களை நாம் தமிழுக்கு மீட்டுக்கொள்ளலாம். சங்க நூல்களில் காணப்படும் சில சொற்கள் வடமொழிச் சொற்களோ அல்லவோ எனச் சந்தேகிக்கப்படுகின்றன. தமிழினின்று இரவல் பெற்ற பல சொற்களைப் போலவே அவைகள் வடமொழியிற் சென்றிருக்கலாம்.1 இருமொழிகளிலும் அச் சொற்கள் காணப்படுதல் பற்றி வடமொழிப் பண்டிதர்கள் அவைகள் வடமொழிச் சொற்கள் எனக்கருதலாயினர். வடமொழிச் சொற்கள் எனக் கருதப்பட்ட பல சொற்கள் தமிழ் மொழிக்கே சொந்தமாதலை ஆராய்ச்சி அறிஞர் பலர் ஆராய்ந்து காட்டியுள்ளார்கள். சங்க நூல்களில் காணப்படும் வட மொழிச் சொற்கள் எனக் கருதப்படுவன இருமொழிகளுக்கும் பொதுவாகிய சொற்களாகலாம் என மக்லீன் என்பார் கருதுவாராயினர்.1 கன்னடம், தெலுங்கு, மலையாளம் முதலிய மொழிகளினின்றும் ஆரியச் சொற்களை நீக்கிவிட்டால் மீந்திருப்பன தமிழ்ச் சொற்களும், இன்று தமிழில் வழக்கு ஒழிந்துபோன பழஞ் சொற்களுமே ஆகும். இவ்வாறு சமக்கிருத மொழியி னின்று இந்து ஐரோப்பிய ஆரிய மொழிகளுக்குப் பொதுவாயுள்ள சொற்களை நீக்கி விட்டால், மீந்திருப்பன திராவிட மொழிச் சொற்களேயாகும். அவற்றுள் பல இன்று தமிழில் வழக்கொழிந்து கன்னடம், தெலுங்கு முதலிய மொழிகளில் மாத்திரம் காணப்படும் பழந்தமிழ்ச் சொற்களை ஒத்தனவாகும்.
வின்ஸ்லோ அகராதியின் முன்னுரையில் வில்லியம் டெயிலர் (William Taylor) கூறியிருப்பது வருமாறு:
ஆதியில் இமயமலை முதல் கன்னியாகுமரி வரையில் வாழ்ந்த ஆதிக்குடிகளிடையே ஒரே மொழி பேசப்பட்டு, அம் மொழி சீர்திருத்தம் அடைந்து, வடகோடியில் பாலியாகவும், தென்கோடியில் தமிழாகவும் வழங் கிற்று. பழைய பாலி மொழியோடு சாத்திரத் தொடர்பான பல கல்தேய சொற் களையும், பொது வழக்கிலுள்ள பல சொற்களையும் சேர்த்துச் சமக்கிருத மொழி உண்டாக்கப்பட்டது. இம் மொழிகளின் பெயர்களைக் கவனிக்கையில் பாலிமொழி சமக்கிருதத்துக்கு முந்தினதென்றும் தெரிகின்றது. பாலி என்றால் மூலம் அல்லது முந்தினது என்று பொருள். சமக்கிருத மென்றால் திருத்தம் பெற்றது அல்லது செம்மையாக்கப்பட்டது என்பது பொருள். மிகப் பழைய பட்டையங்கள் பிராகிருதத்திலும் பாலியிலும் எழுதப்பட்டுள்ளன. இவை சமக்கிருதத்தில் எழுதப்பட்ட சாசனங்களுக்கு முற்பட்டவை. இதனைக் கர்னல் சைக்ஸ் (Colonel Sykes) என்பார் ஆராய்ந்து கூறியுள்ளார்.
சமக்கிருதம் கடவுள்மொழி யென நம்புவது முழு அறியாமை
மேல் நாடுகளினின்றும் இந்திய நாட்டை அடைந்துள்ள ஆங்கிலம், பிரெஞ்சு முதலிய மொழிகளைப் போலவே, ஆரியமும் இந்திய நாட்டுக்கு அன்னியமொழியாக உள்ளது. இம் மொழி இந்திய நாட்டை அடைந்த போது, இலக்கண வரம்பு இல்லாதும் பல குறைபாடுகள் உடையதாயும் இருந்தது. ஆரியர் இந்திய நாட்டை அடைந்து கிராம வாழ்க்கையினராயிருந்தபோது, தமிழர் நகர வாழ்க்கையினராய் வாழ்ந்தார்கள். ஆரியர் சிறிது சிறிதாகத் தமிழர்களோடு பழகிக் கலக்க நேர்ந்தபோது அவர்கள் ஆரியரின் மொழிக்கு இலக்கண வரம்பு செய்தார்கள்; எழுத எழுத்துக்களை உதவினார்கள்; அவர் களுக்குப் பல நூல்களை எழுதினார்கள். ஆரியரின் மிகப் பழைய நூல் எனப் படும் இருக்கு வேதமும் தமிழரின் கூட்டுறவு இன்றிச் செய்யப் பட்டதெனக் கூறுதல் அமையாது. வேதமொழியில் பல தமிழ்ச் சொற்கள் காணப்படு வதையும், வேதபாடல்கள் செய்தவர்களில் பலர் திராவிட வகுப்பைச் சேர்ந்தவர்களாயிருத்தலையும் கீழ்நாட்டு மேல்நாட்டு அறிஞர்கள் ஆராய்ந்து கூறியுள்ளார்கள். சமக்கிருதம் ஒரு கூட்டத்தினரின் சாதி மொழியும், சமய மொழியுமாக இருந்து வந்தது. அம் மொழி, இலக்கியமொழி அளவில் பயன் அளித்தது. அம் மொழியில் எழுதப்பட்ட கிரியை நூல்களாகிய பிராமணங் களைப் பயின்று, கிரியை புரியும் பிராமணக் குழுவினர்களுக்குள் மாத்திரம் அம் மொழி வழங்கிற்று. அது ஒருபோதும் பேச்சு மொழியாக வழங்க வில்லை. கிறித்துவம், புத்தம், முகமதியம் போன்று பிராமணமதம் இந்தியநாடு, மலாய்த் தீவுகள், கம்போடியா முதலிய நாடுகளில் பரவியபோது, அம் மதத்தோடு சமக்கிருதமும் கூடச் சென்றது. மத சம்பந்தமாக மக்கள் புத்திசாலித்தனமாக நடந்துகொண்டார்கள் எனக் கூற முடியாது. குருமார் (பூசாரிகள்) நினைத்தபடி யெல்லாம் மக்கள் ஆடினார்கள். சமயத்தின் பேரால் அரசனைக் கொலை செய்தார்கள், பெண்களையும், ஆண்களையும் பலியிட்டார்கள், 1பாம்பை வணங்கினார்கள், குதிரைகளைப் பலியிட்டு அதன் மாமிசத்தை உண்டார்கள், சொல்லத்தகாத இடக்கரான கருமங்களைச் செய்தார்கள். சிலைகளுக்குக் கன்னிப் பெண்களை மனம் முடித்துவைத்து அவர்களின் போகத்தைக் குருமார்கள் கடவுளின் பிரதிநிதிகளாகவிருந்து அனுபவித்தார்கள்; அனுபவிக்கிறார்கள். இவ்வாறு மக்கள் பூசாரிகள் ஆட்டிய ஆட்டங்களுக்கு ஆடியவைகளுள், சமக்கிருதத்தைக் கடவுள் மொழியெனக் கொண்டதும் ஒன்றாகும். கடவுள் மொழியென ஒன்று இல்லையெனப் பட்டப்பகல்போல இன்று எல்லோருக்கும் விளங்குகின்றது. இவ்வாறிருக்கவும், பொதுமக்களின் அறியாமையையே தமது பிழைப்புக்கு வலிமையாகக் கொண்டுள்ள ஒரு கூட்டத்தினர், உலகை ஏமாற்றி வருதலைத் தமிழன்பர்களும், தமிழ்த் தொண்டர்களும் பார்த்துச் சும்மா இருக்கலாமா? இம் முழு மூடத்தனத்தை ஒழித்தலன்றோ தன்னரசு அடைவதிலும் மேலான குறிக்கோளாகும்.
1சமக்கிருதத்தைக் கடவுள் பேசும் மொழியென நினைப்பது குற்றியை மகனென்றும், கயிற்றைப் பாம்பென்றும் நினைப்பது போன்ற அறியாமையென விளங்குகின்றது. அவ்வாறாகவும் விளக்கைப் பிடித்துக் கொண்டு கிணற்றுள் விழுபவர்போல், மக்கள் தமது சொந்த மொழியைவிட்டு அயலவன் மொழியைக் கடவுள் மொழி என நம்பி வருகின்றார்கள். இதுவே இவ்விருபதாம் நூற்றாண்டு வியப்புகளுள் வியக்கத்தக்க தொன்றாகும்.